< Back
மாநில செய்திகள்
மஞ்சளாறு அணை கரையோரத்தில்மண் அரிப்பை தடுக்கும் பணியைஅதிகாரிகள் ஆய்வு
தேனி
மாநில செய்திகள்

மஞ்சளாறு அணை கரையோரத்தில்மண் அரிப்பை தடுக்கும் பணியைஅதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
5 March 2023 12:15 AM IST

மஞ்சளாறு அணையின் கரையோரத்தில் மண் அரிப்பை தடுக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மஞ்சளாறு அணை

மாநிலம் முழுவதும் உள்ள அணைகளின் கரையோரங்களில் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து கரைகளை சீரமைப்பதற்காக ஆண்டுதோறும் அரசுக்கு செலவு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கண்மாய் மற்றும் குளங்களில் உள்ள கரைகளில் ஏற்பட்டு வரும் மண் அரிப்பை தடுப்பதற்காக அடர்ந்து வளரக்கூடிய புல் விதைகளை தூவி அதன் மேல் தென்னை நார் கயிறு வலையை போர்த்தி புல் வளர்க்கப்பட்டு வருகிறது.

இதனால் கரைகள் சேதமடைவது தடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழகத்தில் முதன்முறையாக தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையின் வெளிப்புற கரையில் மண் அரிப்பை தடுப்பதற்காக ரூ.2 கோடியே 29 லட்சம் மதிப்பில் பணி தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி அணையின் வெளிப்புற கரையில் அடர்ந்து வளரக்கூடிய புல் விதைகள் தூவப்பட்டு அதன் மேல் தென்னை நார் கயிறு வலை போர்த்தப்பட்டு வருகிறது. 1 கிலோமீட்டர் தூரமுள்ள கரையில் தற்போது 700 மீட்டர் தொலைவிற்கு பணி நடைபெற்றுள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

இந்த பணிகளை நேற்று மாநில பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மதுரை மண்டல தலைமை பொறியாளர் ஞானசேகர், பெரியார் வடி நில வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிச்சாமி, மஞ்சளாறு வடிநில செயற்பொறியாளர் சுகுமார், உதவி பொறியாளர்கள் தளபதி, ராம்குமார், சவுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்