மதுரை
வீரவசந்தராயர் மண்டப பகுதியில் 27-ந் தேதி தூண்கள் அமைக்கும் பணி தொடக்கம்
|மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டப பகுதியில் வருகிற 27-ந் தேதி தூண்கள் அமைக்கும் பணி தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டப பகுதியில் வருகிற 27-ந் தேதி தூண்கள் அமைக்கும் பணி தொடங்குகிறது.
வீரவசந்தராயர் மண்டபம்
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்து செல்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி இரவு நடந்த தீ விபத்தில் கோவிலில் கிழக்கு வாசல் ராஜகோபுரம் வழியாக சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் எரிந்து நாசமாயின. அன்றைய தினத்தில் இருந்து கிழக்கு ராஜகோபுரம் மூடப்பட்டு பக்தர்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியை பழமை மாறாமல் ஆகம விதிப்படி புனரமைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகமும், அரசும் முடிவு செய்தது.
அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாலக்கோடு அருகே உள்ள பட்டினம் மலை அடிவாரத்தில் உள்ள கற்களை புனரமைப்பு பணிக்கு பயன்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி அங்கு கற்கள் வெட்டி எடுக்க ரூ.6.40 கோடி, மண்டப வடிவமைப்புக்கு ரூ.11.70 கோடி நிதி அரசு ஒதுக்கீடு செய்தது. அங்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வளையங்குளத்தில் உள்ள கூடல்செங்குளம் பண்ணையில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது. அந்த கற்களை தூண்களாக செதுக்கும் பணி திருப்பூர் ஸ்பதி வேல்முருகன் என்பவருக்கு அரசு வழங்கியது.
6 ஆண்டுகள்
இந்த நிலையில் வீரவசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கடந்த ஜூன் மாதம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல முறை மதுரை வந்து கற்கள் செதுக்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது அவர் திருப்பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும். கற்களை இங்கு கொண்டு வருவதில் எவ்வித சிரமமும் இல்லை. கற்களை செதுக்கும்பணிகள் விரைந்து நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
ஆனால் தீ விபத்து நடந்து 6-ம் ஆண்டு தொடங்கி விட்டது. ஆனால் அந்த இடத்தில் எவ்வித பணிகளும் மேற்கொள்ள அரசு இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் மண்டபத்திற்கு தேவையான கற்கள் இன்னும் வராததால் தூண்கள் செதுக்கும் பணி தாமதம் ஆகிறது. எனவே மலையில் இருந்து கற்களை வெட்டி கொண்டும் வரும் பணியை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வருகிற 27-ந் தேதி தூண்கள் நிறுவப்படுகிறது
இந்த நிலையில் தூண்கள் செதுக்கும் பகுதியான வளையங்குளத்தில் உள்ள கூடல்செங்குளம் பண்ணையில் தற்போது வரை சுமார் 17½ அடி நீளமுள்ள 4 தூண்கள், 4 போதிகல் (பீம்), 5 உத்திரம், 32 பாவு கற்கள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதனை விரைவில் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே நிறுவ உள்ளனர். அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. பழமை மாறாமல் ஒவ்வொரு கல் தூணையும் கலை நுணுக்கத்துடன் தூண்களை வடிவமைத்து அதனை நிறுவுவதற்கான விழா மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 27-ந் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் செதுக்கப்பட்ட தூண்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சேர்க்கும் பணி நேற்று தொடங்கியது. அங்கிருந்து அனைத்து தூண்கள், பாவு கற்கள் போன்றவை 6 லாரிகள் மூலம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அவைகள் தீ விபத்து நடந்த இடத்தில் லாரியில் இருந்து கிரேன் மூலம் இறக்கி வைக்கப்பட்டன. இதன் மூலம் தீ விபத்து ஏற்பட்ட வீரவசந்தராயர் மண்டபத்தில் தூண்கள் நிறுவப்பட உள்ளதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.