< Back
மாநில செய்திகள்
12-ந் தேதி மாவட்டந்தோறும் விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை
மாநில செய்திகள்

12-ந் தேதி மாவட்டந்தோறும் விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
9 Dec 2022 1:30 AM IST

அம்பேத்கர் படத்திற்கு காவி சாயம் பூசியதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் 12-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

அம்பேத்கர் படத்திற்கு காவி சாயம் பூசியதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் 12-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

அம்பேத்கர் சிலை திறப்பு

மதுரை பெருங்குடி விமான நிலைய சாலையில், அம்பேத்கரின் வெண்கல முழு உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலை திறப்பு விழா இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று காலை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அம்பேத்கர் நினைவு தினத்தன்று சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அம்பேத்கருக்கு மாலை அணிவிப்பதாக கூறி, அவரை இழிவுபடுத்தி உள்ளனர். இந்து மக்கள் கட்சியினர், கும்பகோணத்தில் அம்பேத்கரின் உருவப்படத்தில் சட்டையை காவியாக்கி, விபூதியிட்டு அவரை இந்து அமைப்பினர் போல் சித்தரித்து நகரம் முழுவதும் ஒட்டினார்கள். இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையிலும், அம்பேத்கர் இயக்கங்களை வம்பு இழுக்கும் வகையிலும் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.

ஆர்ப்பாட்டம்

திருவள்ளுவர், தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசினார்கள். தற்போது அம்பேத்கருக்கு காவி சாயம் பூசி உள்ளனர். எனவே இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வருகிற 12-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இத்தகைய போக்கை பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் கைவிட வேண்டும். இவ்வாறு சமூக பதற்றத்தை ஏற்படுத்துபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

குஜராத் தேர்தல் முடிவு

குஜராத் தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான். குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்ததால் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதுபோன்று வாக்குகள் சிதறாமல் எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக இணைந்து பா.ஜ.க.வை தனித்து நிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும்.

மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்பது மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். இருவரும் இணைந்து தேர்ந்தெடுக்கும் பெயரை நாங்கள் ஆதரிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிலை திறப்பு விழா நடைபெறும் இடத்தை தொல்.திருமாவளவன், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்