நீலகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில்ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
|கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி: கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சூறாவளி காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை பகுதியில் பலத்த காற்று வீசியதன் காரணமாக ராட்சத மரம் ஒன்று சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டதுடன், சாலையின் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. தீயணைப்புத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் வருவதற்கு காலதாமதமாகும் என்பதால் அப்பகுதி மக்களே சரிந்து கிடந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றி வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
இதைதொடர்ந்து அந்த சாலையில் போக்குவரத்து சீரானது. ராட்சத மரம் விழுந்ததால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.