< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தினத்தந்தி
|
4 July 2023 12:15 AM IST

தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கைகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

போக்குவரத்து நெரிசல்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெயராஜ் ரோட்டில் காய்கறி மார்க்கெட், தற்காலிக பஸ் நிறுத்தம் ஆகியவை உள்ளன. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் ரோட்டோரத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு மார்க்கெட்டுக்கு சென்று வந்தனர். அதே போன்று நடைபாதை வியாபாரிகளும் அதிக அளவில் கடைகளை நடத்தி வந்தனர். இதனால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அந்த பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களையும் வாகன காப்பகத்தில் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மார்க்கெட் அருகே ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

அமைச்சர் ஆய்வு

இந்த நிலையில் ஜெயராஜ் ரோட்டில் உள்ள காமராஜர் மார்க்கெட் பகுதியில் நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் வகையிலும், வாகன நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நடைபாதை வியாபாரிகளுக்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாருடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது, மாநகர சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்