தேனி
ஜாக்டோ-ஜியோ சார்பில்மனித சங்கிலி போராட்டம்:தேனி உள்பட 5 இடங்களில் நடந்தன
|ஜாக்டோ-ஜியோ சார்பில், மனித சங்கிலி போராட்டம் தேனி உள்பட 5 இடங்களில் நடந்தது.
தேனி பங்களாமேட்டில் ஜாக்டோ-ஜியோ சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு மனித சங்கிலி போராட்டம் நேற்று மாலை நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் ராமகிருட்டிணன் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் சாலையோரம் மனித சங்கிலியாக கைகளை கோர்த்து அணிவகுத்து நின்றனர்.
அப்போது, தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவை, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆண்டிப்பட்டியில், பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் போராட்டம் நடந்தது. இதேபோல், போடி தாலுகா அலுவலகம், உத்தமபாளையம் பைபாஸ் சாலை, பெரியகுளம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆகிய இடங்களிலும் ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.