தேனி
மோட்டார் சைக்கிள் மீதுகார் மோதி வாலிபர் பலி:2 பேர் படுகாயம்
|உத்தமபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சின்னமனூர் துப்புரவு பணியாளர்கள் காலனியை சேர்ந்தவர் கவுதம் (வயது 23). நேற்று இவர், தனது நண்பர்களான 2 சிறுவர்களுடன் கம்பத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சின்னமனூருக்கு சென்று கொண்டிருந்தார். உத்தமபாளையம் புதிய பைபாஸ் சாலையில் கோகிலாபுரம் விலக்கு அருகே சென்றபோது, எதிரே வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் பரிதாபமாக இறந்தார். 2 சிறுவர்களும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து காரை ஓட்டி வந்த வத்தலகுண்டுவை சேர்ந்த சர்மா என்பவரை கைது செய்தனர்.