திருநெல்வேலி
ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை மாவட்டம் மேலசெவல் நடுத்தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் என்ற அப்பாத்துரை (வயது 65). ஆட்டோ டிரைவரான இவரை கடந்த 16.9.2023 அன்று மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலசெவலை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்ற கண்ணன் (25), முப்பிடாதி (20) உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.
இந்தநிலையில் நவநீதிகிருஷ்ணன், முப்பிடாதி ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று, நவநீதகிருஷ்ணன், முப்பிடாதி ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை நாகர்கோவில் மத்திய சிறையில் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழங்கினார்.
3 பேர்
இதேபோல் கூடங்குளம் பகுதியில் அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கூத்தன்குழி சுனாமிகாலனியை சேர்ந்த அந்தோணிஜனா (19), தொம்மை சுரேஷ் (43), கூத்தன்குழி பாத்திமா நகரை சேர்ந்த டைசன் (27) ஆகியோரை கூடங்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதனை கலெக்டர் ஏற்று, அந்தோணி ஜனா, தொம்மை சுரேஷ், டைசன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதற்கான ஆணையை கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார். ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் இதுவரை 139 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.