மதுரை
மதுரையில் ரூ.215 கோடி செலவில் கட்டிய கலைஞர் நூலகத்தை வருகிற 15-ந் தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
|மதுரையில் ரூ.215 கோடி செலவில் கட்டிய கலைஞர் நினைவு நூலகத்தை, காமராஜர் பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
மதுரையில் ரூ.215 கோடி செலவில் கட்டிய கலைஞர் நினைவு நூலகத்தை, காமராஜர் பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
அமைச்சர்கள் ஆய்வு
மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.215 கோடி செலவில் கலைஞர் நினைவு நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டு உள்ளது. தற்போது அங்கு புத்தகங்கள் வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதனை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மேயர் இந்திராணி, பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திர மோகன், மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆய்வுக்குப்பின் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா நூற்றாண்டை போற்றும் விதமாக சென்னையில் அண்ணா நூலகத்தை கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது கருணாநிதியின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து இருக்கிறார். இந்த நூலகம், மதுரை மக்களுக்கு மட்டுமின்றி தென்மாவட்ட மக்கள் அனைவருக்கும் மிகுந்த பலன் அளிக்கும்.
ரூ.215 கோடியில்...
இந்த நூலக கட்டுமான பணிகளுக்கு கடந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 11-ந் தேதி மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் அவர் 3 முறை நேரடியாக கட்டுமான பணிகளை ஆய்வு செய்து எங்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கினார்.
அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரின் ஒத்துழைப்போடு திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே நூலககட்டுமான பணிகள் மிக சிறப்பாக நடந்து முடிந்து உள்ளன. ஆரம்பத்தில், நூலக கட்டுமான பணிக்கு மட்டும் ரூ.114 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இதன் மதிப்பீடு ரூ.135 கோடியாக உயர்ந்துள்ளது. புத்தகங்கள் ரூ.60 கோடி, நாற்காலிகள் ரூ.15 கோடி, கம்ப்யூட்டர்கள் ரூ.5 கோடி உள்பட என மொத்தம் ரூ.215 கோடியில் அதன் பணிகள் நிைறவு பெற்றுள்ளன.
15-ந்தேதி திறந்து வைக்கிறார்
இந்த நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற 15-ந் தேதி திறந்து வைக்கிறார். அதில் 15-ந் தேதி என்பது காமராஜர் பிறந்த நாளாகும்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ந் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி. எனவே கல்வி வளர்ச்சி தினத்தில் இந்த நூலகம் திறந்து வைக்கப்படுவது சிறப்பான ஒரு நிகழ்வாகும். கலைஞரின் நூற்றாண்டை கொண்டாடும் இந்த தருணத்தில் அவரது புகழை பரப்பிடும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. மதுரையில் நடந்த விழாவில் பேசும் போது கருணாநிதி மதுரைக்கும், தென்மாவட்டத்திற்கும் ஆற்றியுள்ள பணிகளை பட்டியலிட்டு பேசினேன். குறிப்பாக தென்பகுதி மக்கள் தங்களது வழக்குகளை தீர்த்துக்கொள்வதற்காக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் பொதுமக்களுக்கு அலைச்சல், பண விரயம் ஏற்பட்டது. இதனை தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமைப்பதற்கு கருணாநிதி மிகவும் பாடுபட்டார். மதுரை உயர்நீதிமன்றத்திற்கான கட்டிடத்தை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதனை குறிப்பிட்டு பேசும்போது "கலைஞரின் கொடை" என்று குறிப்பிடுவதற்கு பதிலாக உணர்ச்சி மிகுதியால் வேறொரு வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். அந்த வார்த்தையை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதிபதிகள் மீது மரியாதை
எப்போதும் நீதிமன்றங்கள் மீதும், நீதிபதிகள் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. ஏனென்றால் நான் கடந்த 2006-2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் நான் உணவுத்துறை அமைச்சராக இருந்த போது ரூ.19 லட்சம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அ.தி.மு.க. அரசு வழக்கு போட்டது. ஆனால் இந்த வழக்கில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட கோர்ட்டு என்னை விடுதலை செய்தது.
அதன்பின் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்கள். அதிலும் விடுதலை ஆனேன். தொடர்ந்து அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டு சென்றது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்டது என கூறி என்னை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தது. நீதியை நிலைநாட்டும் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் மீது எனக்கு எப்போதும் மதிப்பும், மரியாதையும் உண்டு.
திராவிடத்தில் ஆன்மிகம்
மேலும் அந்த கூட்டத்தில் காவி அணிந்தவர்கள் எங்கள் விரோதிகள் அல்ல என்றும், திராவிடத்திற்குள்தான் ஆன்மிகம் உள்ளது என்றும் கூறினேன். தி.மு.க. என்றால் ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள் என்ற பொய் பிரசாரத்தை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். அதிக கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியது கருணாநிதி ஆட்சியில் தான். அவரது வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பேரில் அமைச்சர் சேகர்பாபு கோவில்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த திராவிட மாடல் அரசில் ஆன்மிகமும் உள்ளது. அதே போல் தமிழ் அறிஞர்கள் கூட காவி அணிகிறார்கள். அதனால் தான் தமிழை வளர்க்கும் காவிகள் எங்களுக்கு விரோதிகள் அல்ல என்றேன். எடப்படி பழனிசாமி, தன்னை அரசியலில் நிலை நிறுத்துவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும், தமிழக அரசு மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.