< Back
மாநில செய்திகள்
விபத்தில் சிக்கிய வேன் மீது ஆம்னிபஸ் மோதல்; சிறுவன் உள்பட 2 பேர் பலி
விழுப்புரம்
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கிய வேன் மீது ஆம்னிபஸ் மோதல்; சிறுவன் உள்பட 2 பேர் பலி

தினத்தந்தி
|
19 Sept 2023 12:15 AM IST

திண்டிவனம் அருகே விபத்தில் சிக்கிய வேன் மீது ஆம்னிபஸ் மோதியதில் சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திண்டிவனம்,

மேல்மருவத்தூர் பகுதியில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கொசவபட்டி பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் தெய்வம்(வயது 55), திருமங்கலத்தை அடுத்த தேன் கல்பட்டி பகுதியை சேர்ந்த தனபாண்டிமகன் கோகுல்(13), அதே பகுதியை சேர்ந்த மச்சக்கொடி(35) உள்பட 18 பேர் வேனில் புறப்பட்டு மேல்மருவத்தூர் வந்தனர். பின்னர் விழா முடிந்ததும் அவர்கள் மீண்டும் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டனர். வேனை மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் ஒட்டினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கர்ணாவூர்பேட்டை புறவழிச்சாலையில் வந்தபோது விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென சாலையில் திரும்பியது. இதனால் எதிர்பாராதவிதமாக வேன் அந்த கார் மீது மோதியது.

17 பேர் காயம்

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னிபஸ் வேனின் பின்னால் மோதியது. இதில் வேன் கவிழ்ந்து பலத்த சேதமடைந்தது. அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தில் வேனில் வந்த தெய்வம், கோகுல், மச்சக்கொடி, தண்டபாணி, பிச்சை உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தெய்வம், கோகுல், மச்சக்கொடி, தண்டபாணி, பிச்சை ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தெய்வம், கோகுல் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்களுக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்