< Back
தமிழக செய்திகள்
ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் - அமைச்சர் சிவசங்கர்
தமிழக செய்திகள்

ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் - அமைச்சர் சிவசங்கர்

தினத்தந்தி
|
23 Jan 2024 11:39 AM IST

போக்குவரத்து ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் என்பது உண்மைதான் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பணிக்காலத்தில் மரணமடைந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் மட்டும்தான் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு பென்சன் வழங்கப்படுகிறது.

போக்குவரத்து ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் என்பது உண்மைதான். தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது; ஆனால் சிலர் இன்றே ஓட்டுநரை பணிக்கு எடுத்து விடலாம் என கூறுகின்றனர். தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு 96 மாதம் அகவிலைப்படி கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார் ஆனால் அது அவரின் ஆட்சியில் நிறுத்தப்பட்டது என்று ஏன் அவருக்கு தெரியவில்லை?. நிதி நிலை காரணமாக பல திட்டம் கொண்டு வர முடியவில்லை, அதற்கு காரணம் மத்திய அரசு நமக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்காமல் இருப்பதால்தான்.

ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும். அரசு விரைவு பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும்போது ஆம்னி பஸ்களும் அங்கிருந்து இயக்குவதுதான் சரியாக இருக்கும். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்கள் இயங்கினால் அவற்றுக்கும், அரசு பஸ்களுக்கும் சரியான போட்டியாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்