ஆம்னி பேருந்து கட்டணத்தை 5% குறைப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
|கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் ஆம்னி பேருந்து கட்டணம் குறைந்துள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வெளியூர்களுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள் என்பதால், ஆம்னி பேருந்துகளில் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாக கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்து கட்டணம் 5 சதவீதம் குறைப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கள் அறிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில், போக்குவரத்து துறையின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை- கோவையில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1725, அதிகபட்ச கட்டணம் ரூ.2,874 எனவும், சென்னை- நெல்லையில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1960ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.3268 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை- சேலத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.1363ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,895ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து, சென்னை- மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.1688 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.2,554ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை- நாகர்கோவில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2211ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.3,765ஆகவும், சென்னை- திருச்சி குறைந்தபட்ச கட்டணம் ரூ.1325ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,841 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் பேருந்து கட்டணம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.