< Back
மாநில செய்திகள்
கயத்தாறு அருகே டயர் வெடித்து கவிழ்ந்த ஆம்னி பஸ் - டிரைவர் உட்பட 3 பேர் பலி
மாநில செய்திகள்

கயத்தாறு அருகே டயர் வெடித்து கவிழ்ந்த ஆம்னி பஸ் - டிரைவர் உட்பட 3 பேர் பலி

தினத்தந்தி
|
15 Jun 2022 2:13 PM IST

கயத்தாறு அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் உயிரிழப்பு.

கயத்தாறு,

குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்னைக்கு புறப்பட்டது. பஸ்சை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோமநாதபுரத்தை சேர்ந்த பாண்டி(வயது 32) என்பவர் ஓட்டிச்சென்றார்.

பஸ்சில் 28 பயணிகள் இருந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நள்ளிரவு 12 மணி அளவில் ஆம்னி பஸ் நான்குவழிச்சாலையில் சென்றது. அங்குள்ள அரசன்குளம் பகுதியில் சென்றபோது திடீரனெ பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி எதிர்புறமாக நெல்லைக்கு வாகனங்கள் செல்லும் சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி காப்பாற்றக்கோரி கூச்சலிட்டனர். தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு நேரம் என்பதால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள புத்தன்கடையை சேர்ந்த ஜீசஸ் ராஜன்(வயது 47), நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளையை சேர்ந்த சிவராமன்(28) ஆகிய 2 பேரும் பஸ்சுக்குள்ளேயே பரிதாபமாக இறந்தனர்.

பஸ் டிரைவரான பாண்டியின் கை மற்றும் கால்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டது. அதில் இருந்து வெளியே வர முடியாமல் பாண்டி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை தீயணைப்பு துறையினர் கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் பாண்டி உயிரிழந்தார். இதற்கிடையே விபத்துக்குள்ளான பஸ்சின் இடிபாடுகளில் இருந்து குழந்தைகள், பெண்கள் என 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு நெல்லை, கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதில் நெல்லை அரசு மருத்துவமனையில் சென்னை புதுப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த குமார்(36), குரோம்பேட்டையை சேர்ந்த விநாயக்(30), செங்கல்பட்டை சேர்ந்த யுகந்தி(30), திருவட்டாறு புத்தன்கடையை சேர்ந்த விக்டர்(51), மாணிக்கநகரை சேர்ந்த சூரியபிரகாஷ்(25), மாதாங்கோவில் தெருவை சேர்ந்த மதன்குமார்(32) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர சிறுவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்