கயத்தாறு கட்டபொம்மன் சிலை முன்பு ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி
|கயத்தாறு அருகே சென்ற ஆம்னி பஸ் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் கிளினர் உயிரிழந்தார். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
கயத்தாறு:
மார்த்தாண்டத்தில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பஸ் 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. இந்த பஸ்ஸை கேரளாவைச் சேர்ந்த தாஜுதீன் (வயது 54) டிரைவர் ஓட்டி வந்தார்.
கயத்தாறு அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு நாற்கரச் சாலையில் வந்த பஸ், திடிரென சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதியது. இதில் பஸ் சர்வீஸ் ரோட்டை தாண்டி கட்டபொம்மன் மணிமண்டபத்தின் முன்பு நின்ற கார் மீது மோதி, பின்னர் காம்பவுண்ட் சுவற்றை உடைத்து கீழே கவிழ்ந்தது.
இந்த காரில் வந்த திருச்சி உறையூர் சேர்ந்த விவேகானந்தன் குடும்பத்தினர் காரில் இருந்து இறங்கி மணிமண்டபத்திற்கு சென்றதால் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் பஸ்ஸில் கிளினராக உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் தனராஜ் (வயது 30) உயிரிழந்தார். பஸ் டிரைவர் தாஜுதீன் தலையில் பலத்த காயம்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். மற்றவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு கோவில்பட்டி போலீசார் விரைந்து சென்று மழையில் நனைந்து கொண்டு உயிருக்கு போராடியவர்களை அனைவரையும் 108 ஆம்புலன்ஸில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் இறந்து போன தனராஜ்க்கு துர்கா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.