திண்டுக்கல்
சுங்கச்சாவடி அலுவலகத்துக்குள் புகுந்த ஆம்னி பஸ்
|பட்டிவீரன்பட்டி அருகே சுங்கச்சாவடி அலுவலகத்துக்குள் ஆம்னி பஸ் புகுந்து விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே லட்சுமிபுரத்தில், வத்தலக்குண்டு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்தநிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து தேனி மாவட்டம் போடி நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ், சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை சின்னமனூரை சேர்ந்த ராஜா ஓட்டினார். திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடியது.
ஒரு கட்டத்தில் அங்குள்ள சுங்கச்சாவடி அலுவலகத்துக்குள் ஆம்னி பஸ் புகுந்தது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் அலுவலக கட்டிடமும் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் டிரைவர் ராஜா மற்றும் பஸ்சில் பயணம் செய்த தேனியை சேர்ந்த கோபிகா (வயது 22), சுகன்யா (28), குமரேசன் (30), சுப்புராஜ் (33) உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு மற்றும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 35 பேர் காயமின்றி தப்பினர்.
சுங்கச்சாவடி அலுவலகத்துக்குள் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருப்பது வழக்கம். நேற்று அதிகாலையிலேயே இவர்கள், வேறு இடத்துக்கு சென்று விட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.