< Back
மாநில செய்திகள்
தலையில் கல்லைப்போட்டு ஆம்னி பஸ் டிரைவர் கொலை - 2 திருநங்கைகள் கைது
சென்னை
மாநில செய்திகள்

தலையில் கல்லைப்போட்டு ஆம்னி பஸ் டிரைவர் கொலை - 2 திருநங்கைகள் கைது

தினத்தந்தி
|
2 July 2023 9:47 AM IST

கோயம்பேடு பகுதியில் முகத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தது, ஆம்னி பஸ் டிரைவர் என்பதும், அவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. இது தொடர்பாக திருநங்கைகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள காலி இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த கோயம்பேடு போலீசார், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்தவர் யார்?, கொலை செய்யப்பட்டாரா? என விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் பிணமாக கிடந்தவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 48) என்பதும், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது. கடந்த ஒரு மாதமாக அவர் வேலைக்கு செல்லாமல் அதே பகுதியில் தங்கி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் கல்லால் தாக்கியதில் ரவிச்சந்திரன் மண்டை உடைந்து இறந்துபோனதும் தெரிந்தது. எனவே ரவிச்சந்திரன் கொலையானது உறுதியானதால் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 2 திருநங்கைகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்ற சத்யா(38) மற்றும் பீரித்தி என்ற ஜானகிராமன்(34) என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று இவர்கள் இருவரும் சம்பத்குமார்(25) என்பவருடன் கோயம்பேடு பகுதியில் நின்றிருந்தனர். அவர்களிடம் மதுபாட்டில் இருந்தது.

அங்கு வந்த ரவிச்சந்திரன், இவர்களிடம் தனக்கு மதுபானம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் தரமறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் உள்பட 3 பேரும் சேர்ந்து ரவிச்சந்திரனை தாக்கினர்.

பின்னர் கீழே விழுந்து கிடந்த ரவிச்சந்திரன் தலையில் அங்கு கிடந்த கல் மற்றும் சிமெண்டு பலகையை போட்டு கொன்றுவிட்டு தப்பிச் சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் திருநங்கைகள் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்