< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதல்; 4 பேர் பலி - 3 பேருக்கு தீவிர சிகிச்சை
சென்னை
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதல்; 4 பேர் பலி - 3 பேருக்கு தீவிர சிகிச்சை

தினத்தந்தி
|
6 Dec 2022 3:11 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சென்னை கோயம்பேடு நோக்கி ஒரு சொகுசு ஆம்னி பஸ் புறப்பட்டது.

பஸ்சை பெங்களூருவை சேர்ந்த டிரைவர் கிஷோர் (வயது 42) என்பவர் ஓட்டிவந்தார். கிளீனராக ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த ஸ்ரீதர் (24) என்பவர் உடன் இருந்தார். இந்த ஆம்னி பஸ்சில் மொத்தம் 27 பேர் பயணம் செய்தனர்.

அந்த பஸ் நேற்று அதிகாலை கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே தச்சூர் கூட்டுச்சாலை மேம்பாலம் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது ஆம்னி பஸ் முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பக்க பகுதியும், பக்கவாட்டு பகுதியும் அப்பளம் போல நொறுங்கியது. ஆம்னி பஸ் மோதிய வேகத்தில் நிலைதடுமாறிய டேங்கர் லாரி சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கினர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த கவரைப்பேட்டை போலீசார் மற்றும் பொன்னேரி தீயணைப்பு நிலைய வீரர்கள், மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகளான ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தொக்கலா சதிஷ்குமார் (27), சென்னையை அடுத்த நாவலூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தும்லா ரோகித் பிரசாத் (23) மற்றும் பஸ் கிளீனர் ஸ்ரீதர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்தில் கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி கிராமத்தை சேர்ந்த சென்னை பாடியநல்லூர் பணிமனைக்குட்பட்ட மாநகர போக்குவரத்து பஸ் டிரைவரான ஜானகிராமன் (41), என்பவர் கவரைப்பேட்டையில் இருந்து ஆம்னி பஸ்சில் 'லிப்ட்' கேட்டு பயணம் செய்தார். பஸ் விபத்துக்குள்ளானதில் ஜானகி ராமன் படுகாயம் அடைந்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

ஆம்னி பஸ்சின் முன்பக்க இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்த சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்த கிருபாஸ்ரீ (58), விஷ்ணுபிரியா (25) ஆகிய 2 பெண்கள் மற்றும் சென்னை பெசன்ட் நகரைச்சேர்ந்த சாய்பவன் (21) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் தூக்க கலகத்தில் பஸ்சை ஓட்டியதால் விபத்து நடந்ததா? அல்லது பனி மூட்டம் அதிகம் இருந்ததால் முன்பக்க சாலை தெளிவாக தெரியாத சூழலில் இந்த விபத்து நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்