நீலகிரி
மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
|ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி
கோத்தகிரி அருகே பங்களா பாடி அறக்காடு பகுதியை சேர்ந்தவர் சமிமா (வயது 64). இவருக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதை மீட்டு தர கோரியும் பலமுறை குன்னூர் ஆர்.டி.ஓ., கோத்தகிரி தாசில்தாரிடம் சமிமா மனு அளித்துள்ளார். ஆனால், இதுகுறித்து எந்தவித விசாரணையும் நடத்தவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மனு அளிக்க வந்தார். அப்போது சமிமா, தரையில் அமர்ந்து தனது மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிக்க போவதாக கூறினார். பின்னர் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் ஓடி வந்து, அந்த மூதாட்டியிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மூதாட்டி கலெக்டரிடம் மனு அளித்தார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.