நாமக்கல்
சரக்கு வாகனம் மோதி மூதாட்டி பலி
|ஒருவந்தூரில் சரக்கு வாகனம் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
மோகனூர்
மோகனூர் அடுத்த ஒருவந்தூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியை முடித்துவிட்டு, வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவில் மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் இருந்து மோகனூர் நோக்கி சரக்கு வாகனம் ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே நடந்து சென்றவர்கள் மீது சரக்கு வாகனம் மோதியது. இதில் ஒருவந்தூர் பாவடி தெருவை சேர்ந்தவ தெய்வயானை (வயது 80) என்ற மூதாட்டி படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் பலியானார். மேலும் அதே பகுதியை சேர்ந்த காமாட்சி (70) என்பவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தெய்வயானை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார். மேலும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.