ஈரோடு அருகே பயங்கரம்: நடுவீதியில் மூதாட்டி வெட்டிக்கொலை.. போலீஸ் விசாரணை
|ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.மேட்டுபாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரஸ்வதி (85). இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும், ராதா என்ற மகளும் உள்ளனர். சரஸ்வதியின் கணவர் ராமசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவரது மகன் மற்றும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருவதால் மூதாட்டி சரஸ்வதி மட்டும் கே. மேட்டுபாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிஅளவில் மூதாட்டி சரஸ்வதி கே. மேட்டுபாளையம் நடுவீதியில் உடலில் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கோபி செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த மூதாட்டி சரஸ்வதியை மீட்டு கோபி செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
தோட்டத்து வீட்டில் வசித்துவந்த மூதாட்டி கே.மேட்டுபாளையம் நடுவீதியில் எப்படி அரிவாளால் வெட்டப்பட்டு கிடந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோபி செட்டிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.