ஓட்டப்பிடாரம் அருகே நகைக்காக மூதாட்டி கொலை - 3 பேர் கைது
|ஓட்டப்பிடாரம் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா மருதன்வாழ்வு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 77). இவரது மனைவி மீனாட்சி(74). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று மகன்களுக்கும் திருமணமாகி வெளியூரில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அழகர்சாமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது மீனாட்சி உயிரிழந்துள்ளார். மீனாட்சிக்கு ஏற்கனவே இருதயம் சம்பந்தமான நோய் இருந்துள்ளதல் அவர் இயற்கை மரணம் அடைந்துள்ளார் என்று முடிவு செய்துவிட்டனர். ஆனால் மீனாட்சியின் மரணம் குறித்து அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் செல்போன் காணாமல் போனது தெரிய வந்தது.
இதனால் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த நாரைக்கிணர் போலீசார் விரைந்து வந்து மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் இயற்கை மரணம் அடையவில்லை என்றும் யாரோ கொலை செய்துள்ளதும் தெரிய வந்தது.
போலீசார் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த செந்தூர்முருகன்(49), சண்முகக்கனி(39), ராமர்(28) ஆகியோர் தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் இரண்டு பவுன் செயினை பறித்து இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.