தூத்துக்குடி
பாலத்தில் கார் மோதி மூதாட்டி பலி
|எட்டயபுரம் அருகே பாலத்தில் கார் மோதி மூதாட்டி பலியானார். தம்பதி படுகாயம் அடைந்தனர்.
எட்டயபுரம்:
மதுரை சாந்திநகர் 3-வது தெரு பகுதியைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் விஜயகுமார் (வயது 47). மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (43). விஜயகுமாரின் தாயார் பூங்கோதை (70).
இவர்கள் 3 பேரும் நேற்று மதுரையில் இருந்து காரில் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்தனர். காரை விஜயகுமார் ஓட்டினார்.
மூதாட்டி பலி
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த சிந்தலக்கரை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பாலத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் இருந்த பூங்கோதை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விஜயகுமார், கவிதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து உடனடியாக எட்டயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த விஜயகுமார், கவிதா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலியான பூங்கோதை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.