கடலூர்
பெண்ணாடத்தில் மூதாட்டி அடித்துக் கொலை டிரைவர் கைது; 2 பெண்களுக்கு வலைவீச்சு
|பெண்ணாடத்தில் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டிரைவரை கைது செய்த போலீசார், மேலும் 2 பெண்களை தேடி வருகின்றனர்.
பெண்ணாடம்,
வீட்டுஉபயோக பொருட்கள் விற்பனை
பெண்ணாடம் அடுத்த திருமலை அகரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தற்போது பெண்ணாடத்தில் உள்ள ராணி மங்கம்மா சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செந்தில்குமார் வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைன் மூலமாக வாங்கி, பொதுமக்களிடம் விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணாடம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணியாற்றும் சண்முகமும்(39), செந்தில்குமாருடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்தது.
இரும்பு கம்பியால் தாக்குதல்
இந்த நிலையில் சண்முகம், செந்தில்குமார் தரவேண்டிய பணத்தை அவரது தாய் பவுனாம்பாளிடம்(70) கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதற்கிடையே சம்பவத்தன்று பவுனாம்பாள் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற சண்முகம் பவுனாம்பாளை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். மேலும் அவரது மனைவி சாந்தி(30), தங்கை ரத்னா(29) ஆகியோரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பவுனாம்பாளை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவர் கைது
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பவுனாம்பாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாந்தி உள்ளிட்ட 3 பேர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சாந்தி, ரத்னா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.