காஞ்சிபுரம்
உத்திரமேரூரில் வயல்வெளியில் முதியவர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
|உத்திரமேரூரில் வயல்வெளியில் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி சதக்கம் மேலாண்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவருக்கு கலையரசி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் உத்திரமேரூர் பேரூராட்சியில் இருந்து மல்லியங்கரணை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அருகே உள்ள வயல்வெளியில் குணசேகரன் இறந்து கிடப்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது தலையில் லேசான காயம் இருந்ததாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடை அருகே இவர் இறந்து கிடந்ததால் குடிபோதையில் கீழே விழுந்து இறந்தாரா? அல்லது ஏதாவது தகராறில் இவரை அடித்து கொலை செய்துள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.