சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை - ஊட்டி கோர்ட்டு தீர்ப்பு
|மஞ்சூர் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதிக்கு 13 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த சிறுமி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்தப் பகுதியை சேர்ந்த புச்சித்தன் (எ) கன்னட தாத்தா, (வயது 67) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி விளையாடுவது போல் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.
இதற்கிடையே சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் இருந்ததால் சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுமியை பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் எமரால்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புச்சித்தினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதன்படி குற்றம் சாட்டப்பட்ட புச்சிதனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பளித்தார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.