சேலம்
கல்லால் தாக்கி முதியவர் கொலை
|சேலத்தில் மதுபோதை தகராறில் கல்லால் தாக்கி முதியவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் மதுபோதை தகராறில் கல்லால் தாக்கி முதியவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
லாரி டிரைவர்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40), லாரி டிரைவர். இவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகள் செல்லியம்பாளையத்தில் வசித்து வருகின்றனர்.
சிவக்குமார் சேலத்தில் வேைல செய்து வருவதால் அவர் மட்டும் அழகாபுரம் தங்கவேல் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனியாக தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டின் அருகில் உள்ள கேக் கடை பகுதியில் அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கல்லால் தாக்கினார்
அப்போது அங்கு படுத்திருந்த 60 வயது முதியவருக்கும், சிவக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிவக்குமாரை ஆபாச வார்த்தையால் அந்த முதியவர் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார், அருகில் கிடந்த கல்லை எடுத்து முதியவரின் தலையில் ஓங்கி அடித்து தாக்கினார். இதில் முதியவர் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை.
முதியவர் கொலை
இதனிடையே அந்த வழியாக அழகாபுரம் போலீசார் ரோந்து சென்ற போது, முதியவர் படுகாயத்துடன் மயங்கி கிடப்பதை பார்த்தனர். பின்னர் அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த முதியவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. பின்னர் அருகில் நின்ற சிவக்குமாரிடம் விசாரித்தபோது, தன்னை ஆபாச வார்த்தையால் பேசியதால் அவரை கல்லால் தாக்கியதாக தெரிவித்தார். இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கொலையுண்ட முதியவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட முதியவர், அந்த பகுதியில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த முதியவர் பழைய பேப்பர்களை வாங்கி அதை விற்பனை செய்து வந்ததும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து அந்த முதியவர் மூன்று வேளை சாப்பிட்டு சாலை ஓரத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
ஆனால் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட முதியவரை பற்றி அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். சேலம் அழகாபுரத்தில் மதுபோதை தகராறில் முதியவரை லாரி டிரைவர் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.