கரூர்
கார் மீது டேங்கர் லாரி மோதி முதியவர் பலி
|தோகைமலை அருகே கார் மீது டேங்கர் லாரி மோதியதில் முதியவர் பலியானார்.
விபத்து
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பெருமாள்கவுண்டனூர் மேலப்பட்டி பீட்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி(வயது 68). இவர் நேற்று முன்தினம் தனது சொந்த வேலை காரணமாக தனது காரில் திருச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் தனது ஊருக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். கார் தோகைமலை-பாளையம் மெயின்ரோட்டில் உள்ள வெள்ளப்பாறை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே கரூரில் இருந்து அதிவேகமாக வந்த டீசல் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் முத்துச்சாமி ஓட்டிவந்த கார் மீது மோதியது.
பலி
இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி சேதமானதால், காருக்குள் இருந்த முத்துச்சாமிக்கு கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து தோகைமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முத்துச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் முத்துசாமியின் உறவினர் பரிமளா அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான, பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டிபட்டியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.