கடலூர்
தூக்குப்போட்ட நிலையில் முதியவர் பிணம்
|ஸ்ரீமுஷ்ணம் அருகே தூக்குப்போட்ட நிலையில் முதியவர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேத்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீமான் (வயது 62). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு மதிவதனம் என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மதிவதனம் ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். மூத்த மகள் டாக்டர் சபிதா, 2-வது மகள் என்ஜினீயர் சங்கீதா ஆகியோருக்கு திருமணம் ஆகி விட்டது. 3-வது மகள் சத்யா எம்.எல். படிப்பு முடித்துவிட்டு வக்கீலாக பணி செய்து வருகிறார். மகன் தினேஷ்குமார் பொறியியல் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். மகன், மகள்கள் அனைவரும் சென்னையில் வசித்து வருகிறார்கள். மகள்களுக்கு உதவியாக மதிவதனம் சென்னையில் தங்கியுள்ளார். சீமான் மட்டும் சொந்த ஊரில் தங்கியிருந்தார்.
தூக்கில் பிணம்
கடந்த சில நாட்களாக சீமான் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சீமான் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. உள்பக்க கதவு பூட்டப்படாமல் இருந்ததோடு, அங்கு கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து உள்ளே சென்றபோது, சீமான் வீட்டில் உள்ள ஹாலில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இதுபற்றி ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சீமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீமான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? விசாரணை நடத்தி வருகிறார்கள்.