திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் முதியவர் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை
|கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் ஆண் பிணம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகேஉள்ளது கரடிபுத்தூர் கிராமம். இங்கு உள்ள தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில், தரைகிணற்றில் ஆண் பிணம் மிதப்பதாக கிராம நிர்வாக அதிகாரி ஜான்பிரிட்டோ பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கிணற்றில் இருந்து ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
60 வயதுடைய அந்த ஆண் யார் என்பது இதுவரை போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை. ஆள் நடமாட்டம் இல்லாத கிணற்றின் அருகே அந்த நபர் எப்படி வந்தார்? யாராவது கடத்தி வந்து அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.