< Back
மாநில செய்திகள்
யாசகம் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

யாசகம் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்

தினத்தந்தி
|
4 April 2023 12:55 AM IST

யாசகம் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதியவர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, ஆழங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் (வயது 73) என்பவர் வந்தார். அவர், தான் யாசகம் பெற்றதன் மூலமாக கிடைக்கப்பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் சென்றார்.

அப்போது அவர்கள் வங்கி மூலமாக அரசு நிதியில் நேரடியாக செலுத்துமாறு அறிவுறுத்தியதன்பேரில், அவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று, தான் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்தார்.

இது குறித்து பூல்பாண்டியன் கூறுகையில், நான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் யாசகம் பெறுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன். இதுவரை 35 மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ரூ.10 ஆயிரத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தி, மாவட்ட கலெக்டரிடம் ரசீதை கொடுப்பதை வாடிக்கையாக செய்து வருகிறேன்.

இதுவரை 400 பள்ளிகளுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம், கேமரா, நோட்டு- புத்தகம், நாற்காலிகள் ஆகியவற்றை வழங்கியுள்ளேன். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், கொரோனா நிதி கொடுத்ததற்காக பாராட்டு சான்றிதழ் பெற்றேன்.

பல்வேறு அதிகாரிகளிடமும், சமூக அமைப்புகளிடமும் பாராட்டு சான்றிதழை பெற்றுள்ளேன். இன்னும் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தான் நிவாரண நிதி அளிக்க வேண்டியுள்ளது. எனது இறுதி வாழ்க்கை முடியும் வரை இந்த சேவை பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன், என்றார். பூல்பாண்டியனின் சேவையை பாராட்டி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் அவரை நேரில் அழைத்து சால்வை அணிவித்தார். மேலும் அவரை கலெக்டர் அலுவலகத்தில் கூடியிருந்த அலுவலர்கள், பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

மேலும் செய்திகள்