திருவள்ளூர்
பூண்டி ஏரியில் மூழ்கி முதியவர் பலி
|பூண்டி ஏரியில் மூழ்கி முதியவர் பலியானார்.
ஏரியில் மூழ்கினார்
திருவள்ளூர் அடுத்த சதுரங்கபேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் துரை (வயது 62). இவர் கடந்த 2-ந் தேதி மாலை பூண்டி ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றார். மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென வானம் மேகமூட்டமாக காணப்பட்டு இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. அதைத்தொடர்ந்து சூறாவளி காற்று பலமாக வீசியது. இதில் மீன் பிடித்து கொண்டிருந்த துரையின் படகு ஏரியில் அங்கும் இங்குமாக நிலை தடுமாறி தண்ணீரில் சிக்கியது. அப்போது படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த துரை படகில் இருந்து தவறி ஏரியில் விழுந்து விட்டார். இதில் துரை ஏரியில் மூழ்கினார்.
சாவு
உறவினர்கள் அவரை தேடி பார்த்து இருள் சூழ்ந்து விட்டதால் தேட முடியாமல் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்து புல்லரம்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் காலை பூண்டி ஏரியில் துரையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரியின் கரையோரத்தில் துரையின் உடல் ஒதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
புல்லரம்பாக்கம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.