காஞ்சிபுரம்
வாலாஜாபாத் அருகே கல்குவாரி குட்டையில் முழ்கி முதியவர் சாவு
|வாலாஜாபாத் அருகே கல்குவாரி குட்டையில் முழ்கி முதியவர் இறந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கல்குவாரி குட்டையில்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், பழைய சீவரம் ஊராட்சிக்கு உட்பட்ட வரதாபுரம் கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக கைவிடப்பட்ட கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் உள்ள குட்டையில் குளம் போல மழைநீர் தேங்கி உள்ளது. இந்த கல்குவாரி குட்டையில் கிராம மக்கள் குளித்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் வரதாபுரம் கிராமத்தில் வசிக்கும் நாகப்பன் (வயது 65) கல்குவாரி குட்டையில் விழுந்து விட்டதாக கல்குவாரி பணியாளர்கள் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நாகப்பனின் குடும்பத்தினரும் கிராம மக்களுக்கும் கல்குவாரி குட்டையில் நீண்ட நேரம் அவரை தேடியும் கிடைக்கவில்லை.
உடல் மீட்பு
இதுகுறித்து காஞ்சீபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் கல்குவாரி குட்டைக்கு வந்து நீண்ட நேரம் தேடி நாகப்பனின் உடலை மீட்டனர்.
இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வாக்குவாதம்
நாகப்பன் உடலில் காயங்கள் இருப்பதாலும், அவருக்கு நீச்சல் தெரியும் என்பதாலும், அவரது உயிரிழப்பில் சந்தேகமாக உள்ளது எனக் கூறி உறவினர்கள் முதியவரின் உடலை போலீசாரிடம் ஒப்படைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்குவாரி பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்களும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்தனர்.
கிராம மக்களின் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சமாதானம் கூறி நாகப்பன் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாலவாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.