திருவாரூர்
மயான கொட்டகை இடிந்து விழுந்து முதியவர் சாவு
|கூத்தாநல்லூர் அருகே மயான கொட்டகை இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே மயான கொட்டகை இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
சேதமடைந்த மயான கொட்டகை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, மணக்கரை ஊராட்சியில் வடவேற்குடி பகுதி உள்ளது. இங்குள்ள, வெண்ணாற்றங் கரையோரத்தில், இறந்தவர்களை தகனம் செய்வதற்காக, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மயான கொட்டகை கட்டப்பட்டது. இந்த மயான கொட்டகை சேதமடைந்து விரிசல்கள் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது.
எனவே சேதமடைந்த மயான கொட்டகையை அகற்றி விட்டு புதிதாக மயான கொட்டகை கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்்கு கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பத்திரிகையில் செய்தி வெளியானது. ஆனால் அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பரிதாப சாவு
நேற்றுமுன்தினம் மதியம், புள்ளமங்கலம் கீழத்தெருவைச்சேர்ந்த சீனிவாசன் (வயது 65) மேய்ச்சலுக்கு சென்ற தனது மாட்டை தேடி வடவேற்குடிக்கு சென்றார். அப்போது வெயில் அதிகமாக இருந்ததால், சீனிவாசன் சேதமடைந்த அந்த மயான கொட்டகையில் அமர்ந்து இருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக சேதமடைந்த மயான கொட்டகை இடிந்து சீனிவாசன் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே சீனிவாசன் பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
நேற்று அப்பகுதி மக்கள் மயான கொட்டகை அருகே சென்றனர். அப்போது மயான கொட்டகை இடிந்து இடிபாடுகளில் ஒருவர் சிக்கி இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து வடபாதிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சீனிவாசன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மயான கொட்டகை இடிந்து விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கூத்தாநல்லூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.