நாமக்கல்
அழுகிய நிலையில் முதியவர் பிணம்
|திருச்செங்கோட்டில் விவசாய நிலத்தில் அழுகிய நிலையில் கிடந்த முதியவர் பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு அடுத்த சாணார்பாளையத்தை அடுத்து உள்ள கொட்டக்காடு பகுதியில் பழனிச்சாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான விளை நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மாட்டிற்கு வழங்கும் புல் பயிரிட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை அவர்கள் அதனை அறுவடை செய்வதற்காக சென்றனர். அப்போது துர்நாற்றம் வீசி உள்ளது. இதையடுத்து பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பழனிச்சாமி திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தார். இதன்பேரில் திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ் மற்றும் நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அழுகிய நிலையில் கிடந்த 60 வயதுடைய முதியவர் உடலை கைப்பற்றி, அவர் யார்? அவர் எப்படி இறந்தார்? அல்லது யாராவது கொலை செய்துவிட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.