கன்னியாகுமரி
கடன் தொல்லையால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை
|கடன் தொல்லையால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இரணியல் செக்காலர்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68). இவருடைய மனைவி ஜெயா. இவர்களுக்கு 2 மகள்கள். இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
இந்தநிலையில் சம்பவத்தன்று ஜெயா, மூத்த மகள் ரெஜினி வீட்டிற்கு சென்று விட்டார். ராஜேந்திரன் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். மாலை ராஜேந்திரனுக்கு அவரது மகள் ரெஜினி போன் செய்துள்ளார். ஆனால் போனை ராஜேந்திரன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன் மனைவி ஜெயா மற்றும் மகள் ரெஜினி இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் புதிதாக கட்டியிருந்த வீட்டின் மாடியில் உள்ள படுக்கையறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதற்கிடையே அங்கிருந்த ஒரு டயிரியில் 'வீடு புதிதாக கட்டியதில் கடன் அதிகமாயிடுச்சு. நான் உங்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை, இதனால் நான் எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன்' என எழுதியிருந்தார். உடனே அவரை மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாாின்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.