< Back
மாநில செய்திகள்
ஆவடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் உடல் கருகி சாவு - சிமெண்டு பலகை தூக்கி வீசப்பட்டதில் ஆட்டோ சேதம்
சென்னை
மாநில செய்திகள்

ஆவடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் உடல் கருகி சாவு - சிமெண்டு பலகை தூக்கி வீசப்பட்டதில் ஆட்டோ சேதம்

தினத்தந்தி
|
18 May 2023 7:14 PM IST

ஆவடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்ததில் முதியவர் உடல் கருகி பலியானார். இந்த அதிர்வில் சிமெண்டு பலவை தூக்கி வீசப்பட்டதில் ஆட்டோ ஒன்றும் சேதமானது.

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோபால் (வயது 64). இவருடைய மனைவி சகுந்தலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கோபால் மட்டும் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கோபால் வீட்டில் இருந்தபோது பலத்த சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் அவரது வீடு முழுவதும் தீ பரவியது. கோபால் மீதும் தீப்பிடித்து எரிந்தது. அவர் வலியால் அலறி துடித்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் எரிந்த தீயை அணைத்ததுடன், தீயில் சிக்கி உடல் கருகிய கோபாலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கோபால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கியாஸ் சிலிண்டர் வெடித்தபோது பயங்கர வெடிச்சத்தம் போல் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இந்த அதிர்வில் கோபால் வீட்டில் இருந்த கதவு, ஜன்னல்கள் சேதம் அடைந்தன. வீட்டில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின.

மேலும் வீட்டில் இருந்த சிமெண்டு பலகை தூக்கி வீசப்பட்டதில் அங்கு நிறுத்தி இருந்த ஆட்டோ ஒன்றும் சேதம் அடைந்தது. இதுபற்றி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் பரவி இருந்துள்ளது. இதனை கவனிக்காத கோபால், பால் காய்ச்சுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது, பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் அவர் உடல் கருகி இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்