< Back
மாநில செய்திகள்
2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
கரூர்
மாநில செய்திகள்

2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

தினத்தந்தி
|
30 Nov 2022 12:29 AM IST

அரவக்குறிச்சி அருகே 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.

பழைமை வாய்ந்த வீடு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தர்கா தெருவை சேர்ந்தவர் ஹபிபுல்லா. இவருடைய மனைவி பாத்திமா பீவி (வயது 75). ஹபிபுல்லா ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு சையது நஜித் அகமது, சையது தாஜூதீன், காஜாமொய்தீன் ஆகிய 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

மூதாட்டி பாத்திமா பீவி தனது கணவர் வாழ்ந்து வந்த 70 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மாடி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி

இந்த நிலையில் நேற்று காலை 7.15 மணியளவில் மூதாட்டி பாத்திமா பீவி, பால் வாங்கிவிட்டு தனது வீட்டிற்குள் சென்றார். அப்போது பெரும் சத்தத்துடன் அவரது வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் மூதாட்டி பாத்திமா பீவி சிக்கிக்கொண்டார்.

இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனைதொடர்ந்து அரவக்குறிச்சி போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தமிழ் செல்வன், அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பிணமாக மீட்பு

மேலும் கரூர், அரவக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு காலை 8 மணியளவில் மூதாட்டியை மீட்கும் பணி தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மூதாட்டியை மீட்கும் பணியை துரிதப்படுத்தினார்.

இதையடுத்து, சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டன. இதில், ஒரு இடத்தில் மூதாட்டி பாத்திமா பீவி இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து பிணமாக கிடந்தார். இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்