< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகங்கள்- அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகங்கள்- அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
10 Sept 2024 4:20 AM IST

அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகங்கள் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த அதிசயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோவில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் ஆங்காங்கே ஆதரவின்றி தங்கியுள்ளனர். இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009-ன் படி தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்கவேண்டும்

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 13.6 சதவீதம் மூத்த குடிமக்கள் உள்ளனர். இது, 2031-ம் ஆண்டில் 18.2 சதவீதமாக அதிகரிக்கும் என தெரிகிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அடிப்படை வசதிகளை தருவது அவசியம். குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சட்டப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முதியோர் காப்பகத்தையாவது அரசு நடத்த வேண்டும். ஆனால் பெரும்பாலும் தனியார் தொண்டு நிறுவனங்களால்தான் நடத்தப்பட்டு வருகின்றன. இது ஏற்புடையதல்ல. எனவே தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு முதியோர் இல்லமாவது கட்டுவதற்கான பணிகளை 6 மாதத்தில் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்