< Back
மாநில செய்திகள்
ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மாநில செய்திகள்

ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தினத்தந்தி
|
26 Aug 2022 7:29 AM IST

ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 55,000 கன அடியாக உயர்ந்துள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி,

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடகா மாநில மலை மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

அணையின் பாதுகாப்பு கருவி அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. மழைகுறைந்ததால் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து 24 ஆயிரத்து 873 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும் குறைந்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் வினாடிக்கு 14000 கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 16ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர் வரத்து மேலும் அதிகரித்து மாலை 6 மணி நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இந்நிலையில், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 55,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனால், ஒகேனக்கலில் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைந்தும் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க திரிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது

மேலும் செய்திகள்