< Back
மாநில செய்திகள்
எண்ணெய் கிணறுகள் அறிவியல் முறைப்படி மூடப்படவில்லை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

எண்ணெய் கிணறுகள் அறிவியல் முறைப்படி மூடப்படவில்லை

தினத்தந்தி
|
10 Oct 2023 12:15 AM IST

திருவாரூர் மாவட்டம் பெரியக்குடியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகள் அறிவியல் முறைப்படி மூடப்படவில்லை என்றும் இதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அறிவியல் முறைப்படி மூட வேண்டும்

இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சேந்தமங்கலம் ஊராட்சி பெரியக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2 எண்ணெய் கிணறுகளை அமைத்து இருந்தது. பெரியகுடி கிராமத்தில் மூடப்பட்ட ஒரு எண்ணெய் கிணற்றில் இருந்து நேற்று முன்தினம்(ஞாயிற்றுக்கிழமை) அதிகளவில் எரிவாயு கசிந்தது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதில் ஒரு கிணற்றில் 2013-ம் ஆண்டு அதிக அழுத்தம் காரணமாக எரிவாயு வெளியேறியது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சம் அடைந்து எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்த எண்ணெய் கிணறுகள் மூடப்பட்டன. ஆனால் கிணறுகள் அறிவியல் முறைப்படி நிரந்தரமாக மூடப்படவில்லை. 2023 ஜூன் மாதத்திற்குள் நிரந்தரமாக மூடுவதாக திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் 2022-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. தெரிவித்திருந்தது. ஆனால் சொன்னபடி ஓ.என். ஜி.சி. நடந்து கொள்ளவில்லை.

ஆபத்துகள் ஏற்படும் அபாயம்

திருவாரூர் மாவட்டத்தில் எண்ணெய்-எரிவாயு கிணறுகளில் இருந்து கசிவுகள் ஏற்படுவதும் தற்காலிகமாக அவை சரி செய்யப்படுவதும் ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. பெரும் ஆபத்துகள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் எப்போதும் காத்திருக்கிறது.

2021 –ம் ஆண்டு, தமிழ்நாடு அரசு, இனி தமிழ்நாட்டில் எந்த எண்ணெய் – எரிவாயு கிணறும் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உண்மையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், தொடர்ந்து படுகையைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் பழைய எண்ணெய் – எரிவாயுத் திட்டங்களும் தடுத்து பழைய கிணறுகள் மூடப்பட வேண்டும். எண்ணெய்க் குழாய்களெல்லாம் தோண்டி எடுக்கப்பட்டு நீக்கப்படவேண்டும். காவிரிப் படுகையின் அனைத்து மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்