< Back
மாநில செய்திகள்
எண்ணூரில் மழை நீரில் எண்ணெய் கழிவுகள் கலந்த விவகாரம் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்
மாநில செய்திகள்

எண்ணூரில் மழை நீரில் எண்ணெய் கழிவுகள் கலந்த விவகாரம் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்

தினத்தந்தி
|
9 Dec 2023 11:57 AM IST

எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

சென்னை,

`மிக்ஜம்' புயல் காரணமாக பெய்த மழையால் சென்னையில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மழை நீரானது எண்ணூரில் ஆற்று முகத்துவாரம் வழியே கடலில் கலக்கும். ஆனால் புயலின் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டதால் எண்ணூர் முகத்துவாரத்தில் தண்ணீரானது கடல் உள்வாங்காத காரணத்தால் ஆற்றில் நிரம்பி வழிந்தது. இதனால் தண்ணீர் திருவொற்றியூர், மணலி, சடையன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் புகுந்தது.

இதில் திருவொற்றியூரில் பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் இயங்கி வருவதால் ஆற்றிலிருந்து வெளிவந்த கச்சா எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். தண்ணீரில் கலந்த எண்ணெயானது திடீரென தீ பற்றி கொள்ள வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் எரிபொருள் வாசனை வருவதால் சுவாச பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே எண்ணெய் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக வந்து இந்த வழக்கை எடுத்தது. இதில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் தரை பகுதியில் உள்ள எண்ணெய் மழை நீரில் கலக்கும் என்பது உங்களுக்கு முக்கூட்டியே தெரியாதா? என்றும் மாவட்ட ஆட்சியரும் வருவாய் நிர்வாகத்தினரும் என்ன செய்கின்றனர்? என்று கேள்வி எழுப்பியது. மேலும் இதன் உண்மை நிலையை அறிய அரசு ஏன் நிபுணர் குழுவை அமைக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எண்ணூரில் மழை நீரில் கலந்த எண்ணெய் கழிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என்றும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் விளக்கமளித்துள்ளது. மேலும் தரை பகுதிகளில் இருந்த எண்ணெய்தான் மழை நீரில் கலந்து விட்டது என்றும் கூறியுள்ளது. மழை நீரில் எண்ணெய் கலக்காமல் இருக்க மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியது.

மேலும் எண்ணெய் கழிவை வேண்டும் என்றே மழை வெள்ள நீரில் கலந்துவிட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் எண்ணெய் கலக்காத படி தடுப்பணைகள் வைக்கப்பட்டுள்ளன. 500மீ தூரத்திற்கு பரவி உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற இன்னும் 2 நாட்கள் ஆகும் என்று கூறியது.

பின்னர், எண்ணெய் கலந்த விவகாரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நீர் வளத்துறையும் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளன. எண்ணெய் தடயங்கள் மட்டுமே கலந்ததாக வாரியம் கூறுகிறது. ஆனால் 5 கி.மீ தூரத்திற்கு எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளதாக நீர்வளத்துறை கூறுகிறது என்று தீர்ப்பாயம் கூறியது.

இந்த நிலையில் மழை வெள்ள நீரில் எண்ணெய் கழிவுகள் கலந்தது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதாக கூறியுள்ளது.

மேலும் செய்திகள்