அரியலூர்
ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளைபொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்
|மீன்சுருட்டி கடைவீதியில் சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமாக காணப்பட்டது.
சாலை விரிவாக்க பணி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 165 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், 4 வழிச்சாலையாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தியது. இதனைதொடர்ந்து திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, அதற்கான பணிகளை தொடங்க ரூ.1,200 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. அதன்பின்னர், விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடியை கூடுதலாக ஒதுக்கியது. இதையடுத்து இச்சாலை 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. அதில், விக்கிரவாண்டியில் இருந்து கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, பின்னலூர் வரை 66 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பகுதியாகவும், சேத்தியாத்தோப்பில் இருந்து சோழபுரம் வரை 51 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பகுதியாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை வரை 48 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
நில அளவீடு
இதில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு- தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலை என்ஹச்-45சி விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதியில் மட்டும் சாலையின் இருபுறமும் தலா 75 அடி நிலம் மட்டும் கையகப்படுத்தப்படாமல் இருந்தது. மேலும் இதற்காக இழப்பீட்டு தொகையை பெற்றவர்கள் இடத்தினை காலி செய்து கொடுக்காமல் இருந்து வந்தனர். இதனால் நிலம் கையகப்படுத்தும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையில், விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் செல்வக்குமார் மேற்பார்வையில், சாலை அமைக்கும் தனியார் நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர், திட்ட மேலாளர், உதவி திட்ட மேலாளர், தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் நில அளவையர் ஆகியோர் மீன்சுருட்டி கடைவீதியில் கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதியில் இருந்து 3 நாட்களாக மீண்டும் மறு அளவீடு செய்து நில உரிமையாளர்களுக்கு காண்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதனிடையே நேற்று காலை மீன்சுருட்டி கடைவீதியில் இத்திட்டத்திற்காக பொதுமக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல், முறைப்படி நோட்டீஸ் வழங்காமல் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு கடை மற்றும் குடியிருப்புகளை அகற்றுவதற்காக அதிகாரிகள் வந்தனர். அப்போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் கட்டிடங்களை அகற்றக்கூடாது என்றும், ஏன் நோட்டீஸ் வழங்கவில்லை என எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட போலீசார்கள் வரவழைக்கப்பட்டு, கட்டிடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு-முள்ளாக மாறியது. அப்போது போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இது போன்ற முன் அறிவிப்பு இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால் இந்த பகுதியில் பதற்றமாக காணப்பட்டது.