கோவிலை இடிக்க வந்த அதிகாரிகள்; எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்
|ஐகோர்ட் உத்தரவுப்படி கோவிலை இடிக்க ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்ட நிலையில், மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை நொச்சிக்குப்பத்தில் மீனவ மக்கள் வழிபடும் கங்கா பவானி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது பொது இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி, கோவிலை இடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கோவிலை இடித்து அகற்ற ஜே.சி.பி. இயந்திரத்துடன் அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த பகுதிக்குச் சென்றனர்.
அப்போது கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
சீராய்வு மனு தாக்கல் செய்து தங்கள் தரப்பு வாதத்தை சமர்ப்பிக்க காலக்கெடு தர வேண்டும் என கோரிக்கை விடுத்த மீனவ மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை ட்ரோன்கள் மூலம் போலீசார் பதிவு செய்தனர்.
இதையடுத்து நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய செயலாளர் துர்கா மூர்த்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் எழுத்துப்பூர்வமான கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதோடு, அவர்களின் கோரிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.