ஓசூரில் விஷவாயு பரவியதாக கூறப்படும் பள்ளியில் டிடெக்டர் கருவிகள் கொண்டு அதிகாரிகள் ஆய்வு
|பள்ளியில் விஷவாயு கசிவு ஏற்பட்டதா என்பது குறித்து ஓசூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் மாநகராட்சி பள்ளியில் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் நேற்று மதியம் திடீரென ஒரு சில மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அந்த மாணவர்கள் ஓசூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அந்த மாணவர்கள் தங்களுக்கு வித்தியாசமான வாசனை தெரிந்ததாகவும், அதன் பிறகே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறினர். இதனை தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் பிற மாணவர்களுக்கும் அதே போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பெரும்பாலான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் சம்பவ இடத்திற்கு ஓசூர் மாநகராட்சி ஆணையர், உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பள்ளி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து விஷவாயு கசிந்ததா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது, அவ்வாறு எந்த கசிவும் ஏற்படவில்லை என்று தெரியவந்தது.
எனவே வேறு ஏதேனும் வழிகளில் விஷவாயு கசிவு ஏற்பட்டதா, அல்லது மாணவர்கள் சாப்பிட்ட உணவின் காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியில் இன்று ஓசூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விஷவாயு உள்ளிட்டவற்றை கண்டறியும் வகையில் டிடெக்டர் கருவி மூலம் பள்ளியின் வகுப்பறைகள், ஆய்வகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த போது, அங்கு விஷவாயு இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து பள்ளியின் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர். இதற்கு அடுத்தகட்டமாக இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய மாவட்ட கலெக்டர் சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர் இந்த விவகாரத்தில் மேலும் விவரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.