பெரம்பலூர்
உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
|உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பெரம்பலூர் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சின்னமுத்து, ரவி, இளங்கோவன் ஆகியோர் பெரம்பலூர் வெங்கடேசபுரம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் உணவகங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2 கடைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தரமற்றமுறையில் வைக்கப்பட்டிருந்த 2 கிலோ சமைக்கப்பட்ட உணவு, அரை கிலோ சிக்கன் ஆகியவற்றை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ச்சியாக பெரம்பலுரில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) அனைத்து பிரியாணி கடைகளிலும், அசைவ உணவகங்களிலும் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.