< Back
மாநில செய்திகள்
மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை

தினத்தந்தி
|
16 Oct 2023 12:19 AM IST

ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் நேற்று காலை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 24 கிலோ கெட்டுப்போன மீன்கள் அழிக்கப்பட்டது.

அதிரடி ேசாதனை

ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டுகளில் கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார் மேற்பார்வையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் தலைமையில் மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் உள்ளிட்டோர் நகர் மீன் மார்க்கெட்டில் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர். மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த மீன்களில் முதல் கட்டமாக ரசாயனம் கலந்து விற்கப்படுகிறதா என்று ஆய்வு மூலம் பரிசோதனை செய்தனர்.

இந்த ஆய்வில் எந்த கடைகளிலும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இது தவிர கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 6 கடைகளில் உணவுக்கு பயன்படுத்த முடியாத வகையில் பல நாட்களான கெட்டுப்போன மீன்கள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மீன்கள் அழிப்பு

இதை தொடர்ந்து 6 கடைகளில் இருந்த கெட்டு போன 24 கிலோ மீன்களை அதிகாரிகள் கைப்பற்றி உடனடியாக அந்த இடத்திலேயே அழித்தனர். இது தொடர்பாக கெட்டுப்போன மீன்களை வைத்திருந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர் தர்மர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளார். ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 24 கிலோ கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்