கன்னியாகுமரி
'சவர்மா' சாப்பிட்டு மாணவி பலி எதிரொலி:நாகர்கோவில் ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை 25 கிலோ கெட்டுப்போன இறைச்சியை கைப்பற்றி அழித்தனர்
|நாகர்கோவிலில் ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 25 கிலோ கெட்டுப்போன இறைச்சியை கைப்பற்றி அழித்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 25 கிலோ கெட்டுப்போன இறைச்சியை கைப்பற்றி அழித்தனர்.
அதிகாரிகள் சோதனை
நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி தனியார் ஓட்டலில் சவர்மா சாப்பிட்டு பலியானார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஓட்டல்களில் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை இணைந்து சோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் குமார பாண்டியன், சங்கரநாராயணன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜாராம், சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை ஆகியோர் கொண்ட குழுவினர் நாகர்கோவில் கேப் ரோடு, கோர்ட்டு ரோடு, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை மேற்கொண்டனர்.
25 கிலோ இறைச்சி அழிப்பு
அதன்படி மொத்தம் நேற்று 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 6 ஓட்டல்களில் ரசாயன பொடி சேர்த்த கோழி இறைச்சி, கெட்டுப்போன இறைச்சி என மொத்தம் 25 கிலோ இறைச்சிகளை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட 6 ஓட்டல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பின்னர் உணவுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும், தேவையில்லாத கலர் பொடி உள்ளிட்ட ரசாயன பொடிகளை உணவு பொருட்களில் கலக்கக்கூடாது, கெட்டுப் போன உணவுகளை பயன்படுத்தக் கூடாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.