அரியலூர்
கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
|கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையினை ஏற்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வருகிற 26-ந்தேதி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஆடி திருவாதிரை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விழா மேடை அமைக்கும் பணி, பொதுமக்கள் அமரும் இடம், குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதி, பக்தர்கள் வந்து செல்லும் வகையில் பஸ் வசதி உள்ளிட்டவை குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இவ்விழாவில் மங்கள இசை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த ஆய்வில், ஆர்.டி.ஓ. பரிமளம், தாசில்தார் ஸ்ரீதர், கோவில் செயல் அலுவலர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.