செங்கல்பட்டு
சதுரங்கப்பட்டினத்தில் மிகவும் பழமை வாய்ந்த மலைமண்டல பெருமாள் கல் மண்டபத்தை அதிகாரிகள் ஆய்வு - ஆக்கிரமிப்பு புகாரின் பேரில் நடவடிக்கை
|சதுரங்கப்பட்டினத்தில் மிகவும் பழமை வாய்ந்த மலைமண்டல பெருமாள் கல் மண்டபத்தை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள மிகவும் பழமை வாய்ந்த மலைமண்டல பெருமாள் கோவில் உள்ளது. சுமார் 1 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவு உள்ள இக்கோவிலின் கிழக்கு பகுதியில் 1848-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட கல் மண்டபம் ஒன்று உள்ளது. அந்த கல் மண்டபத்தில் ஊஞ்சல், உறியடி மாடங்கள், தூண்கள், பழங்கால சிற்பங்கள் உள்ளிட்டவை காணப்படுகிறது. இக்கோவில் கல் மண்டபங்கள் விஜயநகரபேரரசு காலத்தைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இக்கல் மண்டப வளாகம் பராமரிக்கப்படாமல், மண்டபங்கள் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்கள் சூழ்ந்தது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் வருமானம் இல்லாத கோவில் என்பதால் இந்த கல் மண்டபம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
இச்சூழலில் கடந்த சில ஆண்டுகளாக தனி நபர்கள் சிலர் இக்கோவிலுக்கு அத்துமீறி வந்து சென்றுள்ளதாகவும், அவர்கள் இங்குள்ள புதர்களை அகற்றி வேற்று மத வழிபாட்டு இடமாகவும் மாற்றியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்துசமய அறநிலையத்துறை புனரமைப்பு ஆலோசனை குழு உறுப்பினரும், ஒய்வு பெற்ற தமிழ்நாடு தொல்லியல் துறை இயக்குனருமான எம்.ஸ்ரீதரன், சதுரங்கப்பட்டினம் மலைமண்டல கோவில் செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கல் மண்டபத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் செங்கல்பட்டு கோட்டாட்சியரிடம் கோவில் கல் மண்டபத்தை ஆக்கிரமிப்பு நபர்களிடம் இருந்து மீட்க பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.