கள்ளக்குறிச்சி
வெள்ளை வேர்ப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்பு வயலில் அதிகாரிகள் ஆய்வு
|தினத்தந்தி செய்தி எதிரொலியை தொடர்ந்து வெள்ளை வேர்ப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்பு வயலில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே குளத்தூர் கிராமத்தில் விவசாயிகள் அதிக செலவு செய்து கரும்பு பயிரிட்டு பராமரித்து வந்தனர். பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வந்தது. இந்த நிலையில் வெள்ளை வேர் புழு தாக்குதலால் கரும்பு பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் அவர்கள் கவலை அடைந்தனர். இது தொடர்பான செய்தி படத்துடன் தினத்தந்தி நாளிதழில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.
ஆய்வு
இதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி தலைமையில் துணை இயக்குனர் சுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) விஜயராகவன், கரும்பு அபிவிருத்தி அலுவலர் குருமூர்த்தி மற்றும் கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் விஞ்ஞானி ஸ்டாலின், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சங்கேஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஆனந்தன் ஆகியோர் நோயினால் பாதிக்கப்பட்ட கரும்பு வயலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் ஆய்வு தொடர்பான அறிக்கையை சர்க்கரை துறை மற்றும் வேளாண்மை துறை ஆணையருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.